Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
பருத்திக்கான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாகவும், லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக ஊரக மற்றும் பகுதி நகர்ப்புற பெண்கள், ஜவுளித் துறையின் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பருத்தி விலை உயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நூல் விலை உயர்வு காரணமாக, ஜவுளித் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பருத்தி உற்பத்தி குறைவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் பருத்தி விலை கண்டி ஒன்றுக்கு ரூ.54,700-லிருந்து ரூ.67,700 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதாவது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், நூல் விலையும் கிலோவுக்கு ரூ.301-லிருந்து ரூ.330 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இயலும் என்றும், ஆனால் தற்போது பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருப்பது தொழில்துறைக்கு கூடுதல் சுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்தால், அதிகரித்து வரும் ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவேற்றவும், உலகளாவிய போட்டி சந்தையை எதிர்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இருப்பதால், லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதும், ஜவுளி மதிப்புச் சங்கிலியின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதும் அரசின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள 11 சதவீத பருத்தி இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதன் மூலம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை உலகளவில் போட்டித்திறனுடன் செயல்படவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும் வழிவகை செய்யும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA