Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு துறைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு திருநங்கைகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இது குறித்து தென் சென்னை திருநங்கைகள் விழிகள் அமைப்பின் செயலாளர் துர்காஸ்ரீ,
மாற்றம் வேண்டுமென்று நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களித்து தமிழ்நாடு முதலமைச்சராகக் கொண்டு வந்துள்ளோம்.இதனால் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைத்துள்ளது.
முன்பு இருந்த ஆட்சிக் காலத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் எங்களை போன்ற சில திருநங்கைகளுக்கு மட்டுமே ரூபாய் 1,000 உரிமைத்தொகை கிடைத்தது.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் திருநங்கைகள் விண்ணப்பித்தும், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது குறித்து அப்போதைய அமைச்சர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளோம். பின்பு எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், திருநங்கைகளுக்கான மகளிர் உரிமைத் தொகைக்கான அரசாணையை வெளியிட வேண்டும்.
அனைத்து திருநங்கைகளுக்கும் அரசு கொடுக்கக் கூடிய சலுகைகள் சரியான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகைக் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிப்பது போல் திருநங்கைகளுக்கு இலவச பேருந்துத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு சென்னை கண்ணகி நகரில் திருநங்கைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் அந்த குடியிருப்பில் எங்களால் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், திருநங்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை மாற்றித் தர வேண்டும். அதேபோல், வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 22,634 திருநங்கைகள் உள்ளனர். எனவே, இந்த அரசு திருநங்கைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். தென்சென்னையில் மட்டும் சுமார் 1,954 திருநங்கைகள் உள்ளனர். இதில் 40% திருநங்கைகள் பட்டதாரிகள் ஆவர்.
இவர்களுக்கு மருத்துவமனை, மாநகராட்சி போன்ற இடங்களில் அவரவர் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறோம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN