Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 மே (ஹி.ச.)
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் நேரடியாக திருச்சி கிழக்கில் களம் இறங்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்மானம் விரைவில் சென்னை அறிவாலயத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், தற்போதைய முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், ஒரு தொகுதியை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் அவர் பெரம்பூரைத் தக்கவைத்து, திருச்சி கிழக்கு தொகுதி காலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள், “கட்சியின் மீள் எழுச்சிக்காக தலைவரே நேரடியாக களம் இறங்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகம் கிடைக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆனால், ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இறுதி முடிவு கட்சியின் உயர்நிலை ஆலோசனைக்குப் பிறகே எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam