Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்ட சினோரா அசோக், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று பூக்கடை ஸ்டிங்கர் தெரு பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக 57வது வார்டு எஸ்சி/எஸ்டி பிரிவு அமைப்பாளர் ராஜா, “எங்களிடம் அனுமதி கேட்காமல் எப்படி இந்த பகுதிக்குள் வரலாம்?” எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் ராஜா, த.வெ.க-வைச் சேர்ந்த லட்சுமி மற்றும் சங்கீதா ஆகிய பெண்களை தாக்கியதுடன், அவர்களின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணை மானபங்கப்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திமுக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ