Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 15 மே (ஹி.ச.)
1996 பிப்ரவரி 24 அன்று, புளோரிடா நீரிணைப்பில் சர்வதேச வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த ‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ அமைப்பின் இரண்டு ஆயுதமற்ற செஸ்னா விமானங்களை, கியூபா விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானங்கள் ஏவுகணைகளால் தாக்கி அழித்தன.
இதில் மூன்று அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஒரு அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவர் உட்பட நான்கு மனிதாபிமான பணியாளர்கள் உயிரிழந்தனர். கியூபாவை விட்டு வெளியேறும் அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்த அமைப்பின் விமானங்கள், கியூபா வான்பரப்பை மீறியதாக ஹவானா அப்போது குற்றம்சாட்டியது. ஆனால் அமெரிக்கா, இந்தத் தாக்குதல் சர்வதேச வான்பரப்பில் நடந்த கொடூரமான கொலை என்று கூறியது.
இச்சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான 94 வயது ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தற்போது அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க நீதித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பெரிய ஜூரியின் ஒப்புதல் தேவை.
இந்த சட்ட நடவடிக்கை, கியூபா மீதான அமெரிக்காவின் அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் கியூபாவின் தற்போதைய கம்யூனிஸ்ட் அரசை ஊழல் மற்றும் திறமையற்றது என்று கூறி, ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக வெளிப்படையாக கூறி வருகிறது.
இதற்கிடையில், புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் மரியோ டியாஸ்-பலார்ட், மரியா எல்விரா சலாசர், கார்லோஸ் கிமெனெஸ் மற்றும் நியூயார்க்கின் நிகோல் மல்லியோடாகிஸ் ஆகியோர், அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதி, ரவுல் காஸ்ட்ரோ மீதான கிரிமினல் விசாரணையை மீண்டும் தொடங்குமாறு வலியுறுத்தினர்.
இது குறித்து குடியரசுக் கட்சி எம்.பி. சலாசர் கூறுகையில்,
சாட்சியங்கள் தெளிவாக உள்ளன, பொறுப்பு மறுக்க முடியாதது, தண்டனையின்மை காலம் முடிய வேண்டும்
புளோரிடா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் உத்மியர், பைடன் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டிருந்த மாநில அளவிலான விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளன என தெரிவித்தார்.
பதற்றங்கள் நீடித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
1996-இல் நடந்த தாக்குதலின் போது ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டது ரவுல் காஸ்ட்ரோ தான் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அவரே அதை பகிரங்கமாக கூறியுள்ளார் என குற்றம்சாட்டிய எம்.பி. மரியோ டியாஸ்-பலார்ட் கொலைக் குற்றச்சாட்டுக்கு காலாவதி கிடையாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், கியூபா தரப்பு இந்த முயற்சிகளை அரசியல் நாடகம் என்று நிராகரித்துள்ளது. கியூபா புரட்சியாளர் ஜெரார்டோ ஹெர்னாண்டெஸ், இது அமெரிக்க நீதித்துறையின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் உத்தி என விமர்சித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவது, அமெரிக்க-கியூபா உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், 94 வயதான ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படலாம் என்றும் எம்.பி.க்கள் கோரியுள்ளனர். இருப்பினும், அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே கைதிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் இல்லாததால், நடைமுறையில் அவரை கைது செய்வது சிக்கலானது.
கியூபாவில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவின் தடைகள், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முயற்சிகள் ஆகியவற்றின் பின்னணியில் இந்த சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b