200 யூனிட் இலவச மின்சார திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பை செயல்படுத்த மின்வாரியம் தீவிரம்
சென்னை, 16 மே (ஹி.ச) தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டு மின் நுகர்வோரின் சுமையை குறைக்கும் வகையில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் எதிரொலியாகவே மின்வாரியம் தற்போது செயலாக்க நடவட
200 யூனிட் இலவச மின்சார திட்டம்  - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பை செயல்படுத்த மின்வாரியம் தீவிரம்


சென்னை, 16 மே (ஹி.ச)

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டு மின் நுகர்வோரின் சுமையை குறைக்கும் வகையில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் எதிரொலியாகவே மின்வாரியம் தற்போது செயலாக்க நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மின் பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

மென்பொருளில் மாற்றம் - அரசின் புதிய அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக, மின் கட்டணம் கணக்கிடும் மென்பொருளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயற்பொறியாளர்கள் மற்றும் மின் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. புதிய மானிய விதிமுறைகள் மென்பொருளில் புதுப்பிக்கப்படும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தகுதி சரிபார்ப்பு மற்றும் மானிய கணக்கீடு - 200 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதற்கான நுகர்வோர் தகுதி சரிபார்ப்பு முறைகள் மற்றும் மானியம் கணக்கிடும் முறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு இந்த சலுகை பொருந்தும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சலுகை வரும் மே 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, தகுதியுள்ள நுகர்வோருக்கு இரு மாத கட்டண சுழற்சியில் 200 யூனிட் வரையிலான மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் -புதிய கூடுதல் மானிய விதிமுறைகள் குறித்த முழு விவரங்களையும் கள அளவில் பணிபுரியும் அதிகாரிகள், மின் கணக்கீட்டாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

நுகர்வோருக்கு எவ்வித குழப்பமும் இல்லாமல் மின் கட்டணம் கணக்கிடப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மின் கட்டண முறை குறித்த சந்தேகங்களுக்கு உள்ளூர் மின்வாரிய அலுவலகங்களை நுகர்வோர் அணுகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b