Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
சென்னையில் நடைபெற்ற சாலை விபத்தில் கணவர் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு மொத்தமாக ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க வேண்டும் என சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (61), தனது மனைவி ஜோதிகா (49) மற்றும் மகள் ஷோபிகா (26) ஆகியோருடன் கடந்த 2023 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகே வந்தபோது, அதே சாலையில் சென்ற ‘ஐச்சர்’ சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் மற்றும் அவரது மகள் ஷோபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ஜோதிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இதையடுத்து, கணவர் உயிரிழப்புக்கு ரூ.1.78 கோடி, மகள் உயிரிழப்புக்கு ரூ.49 லட்சம் மற்றும் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி ஜோதிகா சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி ஏ. நசீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை ஒன்றாக விசாரித்த நீதிபதி, “விபத்துக்கு லாரி ஓட்டுநரின் அலட்சியமும் கவனக்குறைவுமே பிரதான காரணம் என்று குறிப்பிட்டார்.
மேலும், “பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிப்பது இயல்பானது. எனவே, அதிவேகம் மட்டுமே விபத்துக்குக் காரணம் என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தை ஏற்க முடியாது” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஜோதிகாவுக்கு 34 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும்அதன்பேரில் அவருக்கு காயங்களுக்கு ரூ.13.58 லட்சம், கணவர் உயிரிழப்புக்கு ரூ.17.24 லட்சம் மற்றும் மருத்துவராக பணியாற்றிய மகள் ஷோபிகா உயிரிழப்புக்கு ரூ.1.29 கோடி என மொத்தமாக ரூ.1.60 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சோழமண்டலம் எம்.எஸ் பொது காப்பீடு நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ