Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
சென்னையில் பொதுமக்களை சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று “கிளாண்டர்ஸ்” (Glanders) எனப்படும் ஆபத்தான தொற்று நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மத்திய அரசின் ஆய்வு அமைப்புகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
“கிளாண்டர்ஸ்” என்பது குதிரை, கழுதை, குதிரைக்கழுதை போன்ற Equines வகை விலங்குகளை தாக்கும் மிக ஆபத்தான பாக்டீரியா தொற்று நோயாகும். இது மனிதர்களுக்கும் பரவக்கூடிய “Zoonotic Disease” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் நேரடி தொடர்பு, மூக்குச்சீழ், கண் சீழ், புண் சீழ் போன்ற உடல் வெளியேற்றங்களின் மூலம் வேகமாக பரவக்கூடியது.
சென்னையில் உடல்நலக்குறைவால் பலவீனமடைந்த குதிரையை அதன் உரிமையாளர் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த குதிரையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் உடலில் பல இடங்களில் புண்கள், வீங்கிய கட்டிகள், கடுமையான சதை சுருக்கம் போன்ற அறிகுறிகளை கண்டறிந்தனர்.
இதையடுத்து கிளாண்டர்ஸ் நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசின் ICAR–National Research Centre on Equines ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
அந்த மாதிரிகள் வைத்து பல்வேறு கட்ட பரிசோதனைகளில் கிளாண்டர்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ICAR அமைப்பு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும், நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தற்போது முதன்மையாக கையாளுவது தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் துறையாகும். Tamil Nadu Arasu சார்பில் கால்நடை நோய் நுண்ணறிவு பிரிவு (Animal Disease Intelligence Unit), Veterinary Epidemiology Centre உள்ளிட்ட பிரிவுகள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு கால்நடை நல வாரியமும் நடவடிக்கையில் இணைந்துள்ளது. சென்னையில் சவாரிக்காக பயன்படுத்தப்படும் சுமார் 140 குதிரைகளிடமிருந்து மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழுமையாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மத்திய கால்நடை ஆய்வு அமைப்புகளின் கீழ் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி தரப்பில் சுகாதார மற்றும் கிருமிநாசினி தெளிப்பு போன்ற துணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், நோய் மேலாண்மையின் பிரதான பொறுப்பு கால்நடை பராமரிப்புத் துறை கையில்தான் இருப்பது உறுதியாகியுள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததன்படி, கோவையிலும் இதற்கு முன்பு இதேபோன்ற ஒரு கிளாண்டர்ஸ் நோய் சம்பவம் பதிவாகியிருந்தது. அப்போது பாதிக்கப்பட்ட குதிரை வழக்கமான நடைமுறைகளின் படி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கிளாண்டர்ஸ் நோய் பரவல் தொடர்பாக பொதுமக்கள், குறிப்பாக குதிரைகள் அதிகமாக பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam