அலுவலக உதவியாளரை காலணியால் தாக்கியதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது புகார்
சென்னை, 16 மே (ஹி.ச) தமிழக காவல் துறை ஆயுதப்படையின் தலைமையகம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இங்கு டிஐஜி-யாக விஜயலட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலக இளநிலை உதவியாளரான விக்னேஷ் என்பவரை காலணியால் தாக்கியதாகக் குற்றச்சா
Tamilnadu Police


சென்னை, 16 மே (ஹி.ச)

தமிழக காவல் துறை ஆயுதப்படையின் தலைமையகம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இங்கு டிஐஜி-யாக விஜயலட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலக இளநிலை உதவியாளரான விக்னேஷ் என்பவரை காலணியால் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோப்புகளை டிஐஜி விஜயலட்சுமி-யின் மேஜையில் விக்னேஷ் வைத்த போது, அதில் இருந்த மின்-அலுவலக கோப்பு எண் அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறி அவர் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அநாகரிகமாக திட்டி, சார்ஜ் மெமோ கொடுத்து விடுவதாகவும் விக்னேஷை டிஐஜி விஜயலட்சுமி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் டிஜிபி-யிடம் விக்னேஷ் புகார் அளித்தும் டிஐஜி விஜயலட்சுமி மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி இது போன்று நடந்து கொள்வது முதல் முறை அல்ல, அவர் இதற்கு முன்பும் பலமுறை மேஜையில் வைக்கப்படும் கோப்புகள், சம்பள பட்டியல்களில் அவருக்கு பிடிக்காத எண் இருப்பதாகக் கூறி அவற்றைக் கிழித்து எறிதல் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சு பணியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் ஆயுதப்படை தலைமையகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சு பணியாளர்கள் விக்னேஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், டிஐஜி விஜயலட்சுமி மீது நடவடிக்கை கோரி தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர். அதில், 'இளநிலை உதவியாளர் விக்னேஷ் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு ஆயுதப்படை தலைமையக அமைச்சு பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம்.

இந்த சம்பவத்தால் அமைச்சு பணியாளர்கள் மத்தியில் கடும் மன உளைச்சல், பதற்றம் மற்றும் பணி பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. எனவே ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிர்வாகப் பணிகள் மற்றும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் விக்னேஷிடம், டிஐஜி விஜயலட்சுமி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

இனி காவல்துறையின் எந்த அலுவலகத்திலும் அமைச்சு பணியாளர்கள் தரக் குறைவாக நடத்தப்படாத வகையில் டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN