சக ஊழியரை காலணியால் தாக்கிய டி.ஐ.ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஐ(எம்) வலியுறுத்தல்
சென்னை, 16 மே (ஹி.ச.) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் ஒருவரை டி.ஐ.ஜி விஜயலட்சுமி காலணியால் தாக்கியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சண்முகம்


சென்னை, 16 மே (ஹி.ச.)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் ஒருவரை டி.ஐ.ஜி விஜயலட்சுமி காலணியால் தாக்கியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இ-ஆபிஸ் நடைமுறையின் கீழ் ஒரு கோப்பை அனுப்பிய அமைச்சுப் பணியாளர் வழங்கிய எண்ணை “ராசியல்ல” எனக் கூறி, டி.ஐ.ஜி விஜயலட்சுமி தனது காலணியை எடுத்து பலமுறை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறையின் உயர் அதிகாரி மனித மாண்புகளை அவமதிக்கும் வகையில், சட்டத்திற்கு புறம்பாகவும் அறிவியலுக்கு எதிராகவும் நடந்துகொண்டுள்ளதாக சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, டி.ஐ.ஜி விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், தாக்குதலுக்கு உள்ளான அமைச்சுப் பணியாளருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஊழியர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P