Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 மே (ஹி.ச.)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, நேஷனல் ஸ்டுடென்ஸ் யூனியன் ஆப் இந்தியா சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இல்லத்தை காங்கிரஸ் மாணவரணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினர்.
மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு 2026 தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
நீட் தேர்வு முறைகேடு சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய தேர்வு தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P