தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த வெளியுறவு குடியுரிமையினர் 18 பேர் கைது!
சென்னை, 16 மே (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Chennai International Airport


சென்னை, 16 மே (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்ததாக கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் சட்டவிரோதமாக வாக்களித்து இருக்கலாம் என்ற ரகசிய தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளின் விரல்களில் வாக்கு மை உள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். விரலில் வாக்கு மை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

இதன்படி, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களில் நடைபெற்ற சோதனைகளில் சட்டவிரோதமாக வாக்களித்ததில் ஏற்கனவே 17 பேர் சிக்கி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று

(மே 15 ஆம் தேதி) இரவு சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல எமிரெட்ஸ் விமானத்தில் பயணிக்க வந்த 64 வயதான கிஷோர் என்பவர் அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதும், அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்ததும் தெரிய வந்தது. ஆனால் அவரது இடது கை ஆள்காட்டி விரலில் வாக்களித்ததற்கான மை இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கவனித்தனர்.

இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் வாக்களித்ததாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது விமான பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்து, பின்னர் வெளிநாடுகளுக்கு திரும்ப முயன்றவர்கள் விமான நிலைய சோதனையில் சிக்கி வருவது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN