Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே
கொடைக்கானல் வனப் பகுதியில் அமைந்துள்ள பேரிஜம், இயற்கை எழில் மிகுந்த முக்கிய சுற்றுலாத் தலமாகும். அடர்ந்த காடுகள், அரிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் அமைதியான சூழல் காரணமாக தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் அனுமதியுடன் இந்தப் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பேரிஜம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் புலிகள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டதில், புலிகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனத்துறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று முதல் பேரிஜம் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், புலிகளின் நடமாட்டம் குறைந்து, நிலைமை பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பிறகு மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வனத்துறையின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பேரிஜம் பகுதிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்து வரத் திட்டமிட்டிருந்த பல சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN