Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 மே (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (மே 16) வருகை தந்தார்.
தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மக்கள் என்ன நினைத்து எங்களுக்கு வாக்களித்தார்களோ, அந்த வேலைகளை நாங்கள் துவக்கியுள்ளோம். நேற்று மதுரை மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.
எங்கெல்லாம் விதிமீறி போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் விதிமீறி இயங்கும் மதுபானக் கூடங்கள் மற்றும் பார்களில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு சீலும் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த ஆட்சி போன்று தவெக ஆட்சி இருக்காது. முதலமைச்சர் விஜய் என்ன நினைத்து செயல்படுகிறாரோ, அதை ஒட்டியே அனைவரும் செயல்பட வேண்டும் என கூறி வருகிறோம்.
இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர். அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு சரியான பாதையில் நடைபெறும். தற்போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அடுத்து ஒரு சில நாட்களில் பெரிய அளவிலான மாற்றத்தை பார்க்கலாம். மதிய உணவைக் கையோடு கொண்டு வந்து, காலையில் இருந்து மாலை வரை தலைமைச் செயலகத்திலேயே அமர்ந்து பல்வேறு ஆய்வு பணிகளில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்று எந்த முதலமைச்சரும் பணி செய்யவில்லை என அனைவரும் கூறுகின்றனர்.
அனைத்து துறைகளையும் முழுமையாக ஆய்வு செய்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம். ஒவ்வொரு துறையிலும் என்ன இருக்கிறது? என்ன இல்லை? என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் புரையோடிப் போய் உள்ளன. அவை கடுமையான எதிர்மறை வளர்ச்சியில் உள்ளன. இவற்றையெல்லாம் சரி செய்த பிறகு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். அமைச்சர்களுக்கான இலாகா இதுவரை ஒதுக்கப்படவில்லை. யார் யாருக்கு என்ன துறை என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் என்று கூறினார்.
தொடர்ந்து, முதலமைச்சரான பின் இதுவரை விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
அவர் எப்போது சந்திப்பார் என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்,
அரசு சார்பாக என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பது குறித்த செய்தி அறிக்கை தினமும் வெளியிடப்பட்டு வரும் வேளையில், முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை.
கண்டிப்பாக மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும். தேவையான நேரத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN