கன்னியாகுமரியில் கனிமவள லாரிகள் மீதான தடை ரத்து - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, 16 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக லாரிகளில் கனிமவளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின் பொன்னுசாமி
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 16 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக லாரிகளில் கனிமவளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா தாக்கல் செய்த மனுவில், கடன் பெற்று 14 மற்றும் 18 சக்கர கனரக லாரிகளை வாங்கி மணல், ஜல்லி, இரும்பு, சிமெண்டு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடையும் வரை, மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமவள பொருட்களை கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததால் தங்களைப் போன்ற லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில நெடுஞ்சாலைகளில் கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், “கனரக லாரிகள் விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு, கனிமவளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு முழுமையான தடை விதிக்க முடியாது. விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு மாற்று வழிமுறைகள் உள்ளன.

அதிக சுமை ஏற்றுதல், அதிவேகம் மற்றும் அபாயகரமான ஓட்டம் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக அதிகாரிகள் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடையுத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam