Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 16 மே (ஹி.ச.)
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அரசியல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் குறுக்கீடுகள் இல்லாத சூழலை கருத்தில் கொண்டும் புதிய அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தோல்வியடைந்திருந்தாலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் பல நலத்திட்டங்கள் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாகவும், அவை தொடர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறினார். புதிய அரசின் நல்ல திட்டங்களையும் வரவேற்போம் என்றார்.
உழைக்கும் மக்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் புதிய அரசு செவிமடுத்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இடம்பெறும் எந்த கொள்கை திட்டமும் இல்லை; அது போன்ற முயற்சியும் இல்லை. மக்களின் நலனே எங்களின் முன்னுரிமை. எதிர்காலத்தில் அரசியல் சூழல் மாறி, கட்சியின் நிலை உயர்ந்தால் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து சிந்திப்போம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒரே நோக்கில் புதிய அரசை ஆதரிப்பதாகவும், நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு என்றும் கூறினார்.
“குதிரை பேரம் குறித்து கம்யூனிஸ்டுகள் அறிந்தவர்கள் அல்ல. அத்தகைய பேரங்களில் எங்கள் கட்சிக்கு அனுபவமும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமே எங்கள் சிந்தனை. குதிரை பேரம் தொடர்பாக வழக்கு வந்தால் சட்டம் தனது கடமையை செய்யட்டும்” என்றும் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவாக செயல்படுவது குறித்த கேள்விக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா கூறிய கருத்தை மேற்கோள் காட்டி, “கட்சி தாவல் தடைச் சட்டத்தில் பல அம்சங்கள் உள்ளன. இதை சபாநாயகர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam