Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா மாற்றம் தொடர்பான அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சரின் தனிச் செயலாளர் ஐ. செந்தில்குமார் ஐஏஎஸ் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று இரவு ஆளுநர் சென்னை திரும்பிய நிலையில், இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து ஆளுநரிடம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கும் வகையிலேயே முதலமைச்சரின் தனிச் செயலாளர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விரைவில் தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam