ஒரு சிலர் செய்த தவறுக்காக 22 லட்சம் பேரை தண்டிப்பதா? - திருமாவளவன் ஆவேசம்
சென்னை, 16 மே (ஹி.ச.) கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற ''நீட்'' தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன்


சென்னை, 16 மே (ஹி.ச.)

கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற 'நீட்' தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை எழும்பூரில் திராவிடர் கழகம் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, ஐயுஎம்எல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டன.

அப்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்,

ராஜஸ்தானில் கோட்டா நகரைப் போல தமிழகத்திலும் தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

அவையனைத்தும் வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. தமிழகத்தில் முன்னதாக 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. தமிழ்நாட்டில் அந்த முறையே பின்பற்றப்பட வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இதனை வலியுறுத்தி பின்பற்ற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

தென்னிந்தியாவிலாவது முதலில் இதனைச் செய்ய வேண்டும். ஒரு சிலர் செய்த தவறுக்காக 22 லட்சம் மாணவர்களுக்குத் தண்டனையா? நீட் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதே விசிகவின் கோரிக்கை என தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P