எரிபொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
சென்னை, 16 மே (ஹி.ச) பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து உயர
Premalatha Vijayakant


Nn


சென்னை, 16 மே (ஹி.ச)

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு புறம் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களில் தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை நீடித்தால் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையும், அன்றாட வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், மீண்டும் ஒரு “லாக்டவுன்” போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி” என்ற பழமொழிக்கிணங்க, ஒரு பக்கம் விலைவாசி உயர்வும் மற்றொரு பக்கம் தட்டுப்பாடும் என இரட்டை சுமைகள் மக்களின் வாழ்க்கையை பெரிதும் சிரமப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, தற்போதைய தட்டுப்பாட்டையும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் அன்றாட தேவைகள் பாதிக்கப்படாத வகையில் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் மீது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ