Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 16 மே (ஹி.ச.)
அக்னி தீர்த்தம் கடற்கரையில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தொடர்ந்து ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று பக்தர்கள் வருகை அதிகரித்தது.
அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், தம்மோடு வாழ்ந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளை தரிசித்து சென்றனர்.
மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam