Enter your Email Address to subscribe to our newsletters

நியூயார்க், 16 மே (ஹி.ச.)
முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திர பயணமாக சீனாவுக்குச் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பினார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதில் மிக முக்கியமானதாக, 200 போயிங் விமானங்களை சீனா வாங்குவதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் 750 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதத்தையும் சீனா அளித்துள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க உற்பத்தித் துறைக்கும், குறிப்பாக விமானத் தொழிலில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய வெற்றி என செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்தார்.
வர்த்தக பேச்சுவார்த்தையில் அமெரிக்க விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டார். சோயாபீன்ஸ், சோளம், பன்றி இறைச்சி உள்ளிட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய சீனா உறுதியளித்துள்ளது. நமது விவசாயிகளுக்கு இது வரலாறு காணாத வாய்ப்பு. சீன சந்தை மீண்டும் அமெரிக்க விவசாயத்துக்கு திறக்கப்படுகிறது என்றார் டிரம்ப்.
இரு தலைவர்களின் சந்திப்பு தைவான் விவகாரத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அதிபர் ஷி உடனான உரையாடல் மிகவும் நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தைவான் உட்பட முக்கிய பிரச்சினைகளில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்தெடுக்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளோம் என்றார்.
மேலும், இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், அதிபர் ஷி ஜின்பிங்கை வாஷிங்டனுக்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இது இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே ஒரு புதிய கூட்டாண்மையின் தொடக்கம். போட்டியை விட ஒத்துழைப்பே இரு நாடுகளின் எதிர்காலம் என அவர் கூறினார்.
இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார வல்லுநர்கள், போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்கும் என்றும், விவசாய ஏற்றுமதி அதிகரிப்பு மத்திய அமெரிக்க மாநிலங்களுக்கு பெரும் பொருளாதார ஊக்கமாக அமையும் என்றும் கணித்துள்ளனர்.
அதே நேரம், தைவான் விவகாரத்தில் எந்த அளவுக்கு உறுதியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்தமாக, டிரம்பின் இந்த சீனப் பயணம் அமெரிக்க-சீன உறவில் ஒரு திருப்புமுனையாக அமையும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b