Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
நமக்யால் ராஜவம்சத்தின் அரசாட்சியின் கீழ் ஒரு தனி ராஜ்யமாக இருந்து வந்த சிக்கிம், பொதுமக்களின் பெருவாரியான ஆதரவோடு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பிற்குப் பிறகு நம் நாட்டுடன் இணைந்தது.
அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்களைத் தொடர்ந்து, 1975-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், சிக்கிம் முறைப்படி இந்திய ஒன்றியத்தின் 22-வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
நேபாளம், பூடான், திபெத் ஆகிய மூன்று அண்டை தேசங்களுடன் தன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள சிக்கிம், நம் தேசப் பாதுகாப்பின் மிக முக்கியக் காவலனாகவும், பிரதான அரணாகவும் திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டு முதல் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே முழுமையான இயற்கை விவசாய மாநிலம் என்ற பெருமையைப் பெற்று, நிலையான வேளாண்மைக்கான அந்த அர்ப்பணிப்பை இன்று வரை அது தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
பாரதத்தின் கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களில் ஆழமாக வேரூன்றி, தன் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, நம்முடன் இணைந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது.
நம் தேசத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர்ந்து செழித்தோங்கி வரும் சிக்கிம் மாநில மக்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b