போதைப்பொருள் நடமாட்டத்தை முறியடிக்க அதிரடி நடவடிக்கை - தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
சென்னை, 16 மே (ஹி.ச) தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக துறை ஆணையர், அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் உதவ
Swift Action to Curb Drug Trafficking


சென்னை, 16 மே (ஹி.ச)

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இது தொடர்பாக துறை ஆணையர், அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க, ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO), சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய ஒரு வலுவான கண்காணிப்பு வலையமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழு, சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்.

இதற்கிடையே, டாஸ்மாக் நிர்வாகமும் தனிப்பட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில், போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்டறிய திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b