அதிமுக கொரடா சர்ச்சை தொடர்பாக இரு தரப்பு மனுக்களையும் சட்டப்படி ஆய்வு செய்வோம் - சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் உறுதி
சென்னை, 16 மே (ஹி.ச.) 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பி
Speaker J.C.P. Prabhakar.


சென்னை, 16 மே (ஹி.ச.)

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.

மேலும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கொரடா யார் என்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் கொரடா பதவி தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக இரு அணிகளும் தனித்தனியே தங்களது தரப்பு கொரடாவை அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தன.

இரு தரப்பினரும் அளித்துள்ள மனுக்களை சட்டரீதியாக ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் கூறுகையில்,

இரு தரப்பினரும் அளித்துள்ள ஆவணங்கள், கட்சியின் பைலா விதிகள், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டப்பேரவை நடைமுறை விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். சட்ட வல்லுநர்களின் கருத்தையும் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அதிமுகவில் தலைமைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பான கொரடா பதவிக்கு இரு தரப்பும் உரிமை கோரி வருகின்றன.

சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும்போது உறுப்பினர்களுக்கு கட்டளையிடும் அதிகாரம் கொரடாவுக்கு இருப்பதால், இந்தப் பதவி அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சபாநாயகரின் இந்த அறிவிப்பால், அதிமுக கொரடா விவகாரத்தில் உடனடித் தீர்வு எட்டப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

சட்டப்பூர்வ ஆய்வு முடியும் வரை சட்டப்பேரவையில் அதிமுகவின் செயல்பாடுகளில் குழப்பம் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b