பள்ளிகளில் முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை விளக்கம்
சென்னை, 16 மே (ஹி.ச.) 2026-27 ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை விரிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தல
T


சென்னை, 16 மே (ஹி.ச.)

2026-27 ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை விரிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி வளாகம், அனைத்து வகுப்பறைகள், சமையலறைகள், கழிவறைகள், தலைமை ஆசிரியர் அறை, குடிநீர் தொட்டிகள் மற்றும் கை கழுவும் இடங்கள் ஆகியவை சுத்தமாகவும், மாணவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியின் பெயர் பலகை பொதுமக்கள் தொலைவில் இருந்தே தெளிவாக காணப்படும் வகையில் வண்ணப்பூச்சுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்கள் போன்ற அனைத்தும் செயல்படும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2026-27 கல்வியாண்டிற்கான இலவச நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு தாமதமின்றி கிடைக்க மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இணைந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, கல்வி உதவித்தொகைகள் மற்றும் இலவச நலத்திட்டங்கள் குறித்து பள்ளி வளாகம் அருகில் விளம்பரப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை தையல் பணிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. இதுவரை நோட்டுப்புத்தகங்கள் 92.18 சதவீதமும், பாடப்புத்தகங்கள் 100 சதவீதமும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீருடைகள் 95 சதவீதம் தையல் முடிந்து, 71 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA