Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 16 மே (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தளபதி (36) என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நண்பர்கள் உட்பட மொத்தம் 6 பேர் திருவையாறு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்திய அவர்கள், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் காரில் அம்மன்பேட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்டியூர் அருகே வந்தபோது, கார் அதிக வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பலத்த சத்தத்துடன் மோதியது.
மோதிய வேகம் அதிகமாக இருந்ததால் கார் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் தளபதி மற்றும் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த மற்ற 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருவையாறு காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கார் விபத்திற்கான காரணம் அதிக வேகமா, மது போதையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் சோகமாக முடிந்த இந்த சம்பவம் அம்மன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களை வேதனை அடையச் செய்தது.
Hindusthan Samachar / ANANDHAN