Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மே (ஹி.ச.)
தமிழகத்தில் முக்கிய 6 துறைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டாஸ்மாக், போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு தனித்தனி சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் காவல்துறை தலைமையகத்தில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமூக வலைதள கண்காணிப்பு, பத்திரப் பதிவுத்துறை செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளையும் இந்த சிறப்பு கண்காணிப்பு அமைப்பின் கீழ் கொண்டு வர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், கள்ளச்சந்தை மது விற்பனை, அனுமதியற்ற சேமிப்பு உள்ளிட்ட விவரங்களை உளவுத்துறை காவலர்கள் மற்றும் உள்ளூர் எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு அதிகாரிகள் தினசரி அடிப்படையில் தலைமையகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
முறைகேட்டில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகளின் உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக காவல்நிலையங்களில் தினமும் பதிவாகும் வழக்குகளையும் சிறப்பு அதிகாரிகள் மூலம் தனியாக கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ