விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.க்கு 2 ஆண்டுகள் சிறை
திருச்சி, 16 மே (ஹி.ச.) திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கீழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் தனது நிலத்தில் மின்சார மோட்டார் பொருத்தி விவசாயம் செய்ய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார். இதற்காக தனது பெயரில் உள
Prison


திருச்சி, 16 மே (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கீழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை.

இவர் தனது நிலத்தில் மின்சார மோட்டார் பொருத்தி விவசாயம் செய்ய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார்.

இதற்காக தனது பெயரில் உள்ள நிலத்திற்கு சான்றிதழ் வழங்கும்படி எம்.புதுப்பட்டி (மேற்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.

கடந்த 17-11-2008 அன்று கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த முரளிதரன் (68), தனக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தந்தால்தான் சான்றிதழ் தரமுடியும் என்றார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லதுரை ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை செல்லதுரையிடம் கொடுத்து அனுப்பினர். அதை முரளிதரன் வாங்கும்போது, போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி புவியரசு முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட முரளிதரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அரசு தரப்பில் வக்கீல் கோபிகண்ணன் ஆஜரானார்.

இந்த வழக்கில் சாட்சிகளை திறம்பட ஆஜர் செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் பாராட்டினார்.

Hindusthan Samachar / ANANDHAN