புழல் ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை அளித்த புகார் - ஆயுதப்படை ஆய்வாளர் உட்பட 3 போலீசார் அதிரடி நீக்கம்
சென்னை, 17 மே (ஹி.ச.) புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளை காளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது விதிமீறி சலுகைகள் வழங்கியதாக புகார்கள் எழுந்தன. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும், புழல்
புழல் ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை அளித்த புகார் - ஆயுதப்படை ஆய்வாளர் உட்பட 3 போலீசார் அதிரடி நீக்கம்


சென்னை, 17 மே (ஹி.ச.)

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளை காளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது விதிமீறி சலுகைகள் வழங்கியதாக புகார்கள் எழுந்தன.

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும், புழல் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருபவருமான ரவுடி வெள்ளை காளி, அண்மையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது, அவரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார், விதிகளை மீறி அவருக்கு சில சலுகைகள் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

வெள்ளை காளியிடம் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்ற வளாகத்தில் அவரை கட்டுப்பாடின்றி உறவினர்களுடன் பேச அனுமதித்ததாகவும், வெளியில் இருந்து உணவு வரவழைத்து கொடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரவுடிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை முற்றிலும் மீறி செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் முதற்கட்டமாக குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை ஆய்வாளர் ஒருவர் மற்றும் இரண்டு காவலர்கள் என மொத்தம் மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு காவல்துறையினரே உடந்தையாக செயல்படும் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b