இமாச்சலப் பிரதேசத்தில் 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
இமாச்சலப் பிரதேசம், 17 மே (ஹி.ச.) இமாச்சலப் பிரதேசத்தில் 2026 உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக, தர்மசாலா, பாலம்பூர், மண்டி, சோலன் ஆகிய நான்கு மாநகராட்சிகள் உட்பட 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
51 urban local bodies in Himachal Pradesh


இமாச்சலப் பிரதேசம், 17 மே (ஹி.ச.)

இமாச்சலப் பிரதேசத்தில் 2026 உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக, தர்மசாலா, பாலம்பூர், மண்டி, சோலன் ஆகிய நான்கு மாநகராட்சிகள் உட்பட 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

589 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இது குறித்து,அம்மாநில தேர்தல் ஆணையர் அனில் கச்சி கூறுகையில்,

தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு மாநகராட்சிகள், 25 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் அடங்கும்.

1,80,963 ஆண்கள், 1,79,882 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 14 பேர் என மொத்தம் 3,60,859 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 18 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் 1,808 பேர் உள்ளனர்.

தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கை உறுதி செய்வதற்காக மாநில காவல்துறை மற்றும் உள்துறையுடன் இணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

என்று தெரிவித்தார்.

அதிகபட்ச வாக்குப்பதிவை ஊக்குவிக்க அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் தொடர்பான தகவல்களை வழங்கவும் இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, ஆகாசவாணி, தூர்தர்ஷன் ஆகியவற்றுக்கு தேர்தல் அறிவிக்கைகளை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், மூன்று கட்டங்களாக நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தேர்தல்கள் மே 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளன. பஞ்சாயத்து ராஜ் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஏப்ரல் 29 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டதுடன் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கான தேர்தல் நடைமுறை தொடங்கியது. மே 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மே 12, 13 தேதிகளில் பரிசீலனை நடந்தது. வேட்புமனுக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீட்டுக்குப் பிறகு மே 15 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 86,725 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 793 மனுக்கள் பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டன. பின்னர் 15,708 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் 70,224 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

19,448 செல்லுபடியாகும் வேட்புமனுக்களில் 1,805 பேர் வாபஸ் பெற்றதையடுத்து, 17,643 வேட்பாளர்களுடன் காங்ரா மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 2,837 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 11,728 வேட்பாளர்களுடன் மண்டி இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிம்லா மாவட்டத்தில் 6,118 வேட்பாளர்களும், சம்பா மாவட்டத்தில் 7,315 போட்டியாளர்களும் உள்ளனர். இவை அதிக பங்கேற்பைக் கொண்ட மாவட்டங்களாகும். ஹமீர்பூரில் 4,849, உனாவில் 4,755, பிலாஸ்பூரில் 4,145, சோலனில் 4,195, குலுவில் 4,098 வேட்பாளர்கள் உள்ளனர்.

சிர்மௌர் மாவட்டத்தில் 3,919 பேர் இறுதிப் போட்டியில் உள்ளனர். அதேசமயம் பழங்குடி மாவட்டங்களான கின்னௌர் மற்றும் லாஹௌல்-ஸ்பிதியில் முறையே 1,034 மற்றும் 425 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்த தலைமையகங்களில் வாக்குப்பதிவு நாளன்றே நடைபெறும். ஆனால் நான்கு மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 31 அன்று காலை 9 மணிக்கு தனியாக நடைபெறும்.

Hindusthan Samachar / vidya.b