Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், மே 17 (ஹி.ச.)
திண்டுக்கல்லில் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருவதால், மாவட்ட அளவில் கட்சி அலுவலகங்களை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பதற்றம் நிலவி வருகிறது.
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வேலுமணி தரப்புக்கு ஆதரவாக உள்ளார்.
இந்த நிலையில், திண்டுக்கல்–நத்தம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான நெப்போலியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் இரு தரப்பினரும் அலுவலகத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதுடன் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P