Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 17 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கூட்டணி அரசின் ஆட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்தார்.
தனது அறிக்கையில் கூறுவது :
தற்போதைய ஆட்சியில் ஊழலும், திசைதிருப்பும் அரசியலும் மட்டுமே காணப்படுகின்றன என அவர் குற்றம்சாட்டினார்.
கூட்டணி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரத்தை முற்றிலும் பாதித்துவிட்டதாக ஜெகன் கூறினார். 2025-26 நிதியாண்டில் மாநில ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சி விகிதம் 10.75 சதவீதம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அரசு வருவாய் வளர்ச்சி விகிதம் 3.22 சதவீதமாக குறைந்திருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். மாநிலம் உண்மையாக வளர்ச்சி அடைந்திருந்தால், அதற்கேற்றார் போல அரசு வருவாயும் அதிகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2023-24 நிதியாண்டில் தனது ஆட்சிக்காலத்தில் வரி வருவாயாக ரூ.85,922.23 கோடி கிடைத்ததாக ஜெகன் நினைவூட்டினார்.
ஆண்டுதோறும் சராசரியாக 8 சதவீத வளர்ச்சி இருந்திருந்தால், 2025-26க்குள் அது ரூ.1,00,219.69 கோடியாக உயர்ந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய கூட்டணி ஆட்சியில் வரி வருவாய் ரூ.86,552.68 கோடியாக மட்டுமே உள்ளதாகவும், இதனால் சுமார் ரூ.13,667 கோடி குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலைமையில், மாநில பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க கூட்டணி அரசு தவறியுள்ளதாகவும், மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA