மதுக்கடையை அகற்றக் கோரி கடை முன்பு அமர்ந்து போராட்டம்
சேலம், 17 மே (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாயக்கன்பாளையம்
Tasmac


சேலம், 17 மே (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் எண் 7160 கொண்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மதுக்கடை குடியிருப்பு பகுதிக்கும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்துக்கும் அருகில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடையால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடைக்கு வருவோர் மது அருந்தி சாலையோரங்களில் தகராறு செய்வது, பெண்களிடம் இடையூறு ஏற்படுத்துவது, இரவு நேரங்களில் சத்தம் போடுவது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு, கடை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைக்கு மது வாங்க வந்தவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், சிலரை திருப்பி அனுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக கடையின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதாக உறுதியளித்த பின்னரும், கடையை நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN