Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இம்மாத இறுதியில் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கான நிலுவையில் உள்ள மத்திய நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார்.
மேலும் நீட் விலக்கு, கல்வி மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதனுடன் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை கோருவதும் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
முதலமைச்சரின் இந்த டெல்லி பயணம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வேகம் கொடுக்கும் வகையில் அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
பயணத்திற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை மற்றும் சந்திப்பு நேரங்கள் குறித்து தலைமைச் செயலகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய - மாநில உறவுகளில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b