அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது - முன்னாள் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை, 17 மே (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (மே 17) காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் மாறினால்தான் கட்சித்தாவல் தடைச்சட்டம் ச
அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது - முன்னாள் அமைச்சர் ரகுபதி


புதுக்கோட்டை, 17 மே (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று

(மே 17) காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் மாறினால்தான் கட்சித்தாவல் தடைச்சட்டம் செல்லாது. ஆனால், அதிமுகவில் இப்போது அப்படியில்லை. எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பேரவைத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார். சட்டப்படி, தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படும். ஆனால், அவர்களுக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது ஆளுநரின் கையில்தான் உள்ளது.

தவெகவுக்கு ஆதரவளிக்கும் அதிமுக உறுப்பினர்களைச் சந்திக்க முதல்வர் செல்வதற்கு முன்பாக, அவர்கள் வீட்டுக்கு சோபா செல்கிறது. சோபா கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

அமமுக உறுப்பினர் முதல்நாளே தவெகவுக்கு ஆதரவளித்தார். அதன்பிறகு, பேரவையில் வெளிப்படையாக ஆதரவளித்துப் பேசியதால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது உறுதியாகின்றது.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ஆட்சியில் பங்கு வேண்டும் என நீண்டகாலமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது தவெகவில் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் பங்கு பெற்றால், ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மற்ற கூட்டணிக் கட்சிகளைப் பொருத்தவரை அவர்கள் தவெக ஆட்சியமைப்பதற்காக மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். திமுக அணியில்தான் அவர்கள் தொடர்கிறார்கள்.

வெளியே ஆவேசமாக வசனம் பேசியவர், சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால், பயந்த சுபாவம் கொண்டதுபோலவும், அச்ச உணர்வுடன் இருப்பது போலவும்தான் தெரிகிறது. என்ன செய்யப் போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவளிக்க முன்வந்ததாகக் கூறப்படுவது தவறு. கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்தவர்கள்தான் திமுகவினர். எனவே, எங்களுக்குப் பதவி முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம்.

அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவினர் பலரும் அமைச்சர் செங்கோட்டையன் மூலமாக தவெகவில் சேருவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b