தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு
தூத்துக்குடி, 17 மே (ஹி.ச.) வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Fish Prices Rise in Thoothukudi Due to Reduced Supply


தூத்துக்குடி, 17 மே (ஹி.ச.)

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், விசைப்படகு மீனவர்கள் யாரும் கடந்த சில வாரங்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர்.

குறைந்த அளவு மீனவர்களே வந்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.

மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், அதுபோல் மாவட்டத்தில் பல இடங்களில் மீன் ஏலம் நடைபெறாததாலும், மீன்கள் வாங்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை முதல் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். இதனால் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,400 முதல் ரூ.1,600 வரையும், விளைமீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையும், கேரை கிலோ ரூ.300 வரையும் நண்டு கிலோ ரூ.750 வரையும், சாளை மீன் மீன் ஒரு கூடை ரூ.2,000 முதல் ரூ.2,300 வரையும், வங்கனை மீன் ஒரு கூடை ரூ.2,000 வரையும் விற்பனையானது.

சில்லறை கடைகளில் சீலா மீன் கிலோ ரூ.2000 வரை விற்பனை விற்பனையானது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b