Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
சென்னையில் வயது முதிர்வு காரணமாக பொதுமக்கள் பயன்பாட்டின்றி பராமரிக்கப்பட்டு வந்த ஒரு குதிரை “கிளாண்டர்ஸ்” நோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
“கிளாண்டர்ஸ்” என்பது பர்கோல்டேரியா மல்லெய் என்ற நுண்ணுயிரியால் பரவும் ஆபத்தான தொற்று நோயாகும். இந்த நோய் குதிரைகள், கழுதைகள் உள்ளிட்ட ஒற்றைக் குளம்பு விலங்குகளை பாதிப்பதுடன், பாதுகாப்பின்றி கையாளும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டது.
பாதிக்கப்பட்ட குதிரைகளில் கடுமையான உடல் பலவீனம், சுவாசக்குறைவு, மூக்கில் சளி வடிதல், தோல் புண்கள் மற்றும் உடல் மெலிவு போன்ற அறிகுறிகள் காணப்படும் என கால்நடை துறை தெரிவித்துள்ளது.
நோய் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் நோய் நிகழ்வியல் பிரிவு மற்றும் சைதாப்பேட்டை கால்நடை பன்முக மருத்துவமனை மருத்துவக் குழுக்கள் சம்பவ இடங்களில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட குதிரையுடன் தொடர்பில் இருந்த பிற குதிரைகளுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பாதிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள குதிரைகளிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் அனுப்பப்பட உள்ளன.
இதனுடன், சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ