Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 17 மே (ஹி.ச.)
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா போதையில் இருசக்கர வாகன பழுது நீக்கும் நிலைய ஊழியரை தாக்கிய இளைஞரின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்த ஜமால் என்பவர், தனது வீட்டுடன் இணைந்து இருசக்கர வாகன பழுது நீக்கும் நிலையம் நடத்தி வருகிறார்.
நேற்று அவர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தள்ளாடியபடி வந்து கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து கடையில் பணியாற்றி வந்த ஊழியர், “ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஆத்திரமடைந்த இளைஞர், ஊழியரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து கடை உரிமையாளர் ஜமால், அவசர போலீஸ் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, காலை காவல் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தி சென்றனர்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்த அதே இளைஞர், ஜமால் வீட்டின் முன்பு பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் மீண்டும் தலையிட்டு பிரச்சனையை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதல் மற்றும் தகராறு தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜமால் அளித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam