மலர் கண்காட்சியை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நீலகிரி, 17 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் தென்னிந்தியாவின் மலைகளின் அரசியாக விளங்கும் உதகையில், உலகப் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி நாளை (மே 18) வெகு விமரிசையாகத் தொடங்குகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து
Local Holiday


நீலகிரி, 17 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் தென்னிந்தியாவின் மலைகளின் அரசியாக விளங்கும் உதகையில், உலகப் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி நாளை (மே 18) வெகு விமரிசையாகத் தொடங்குகிறது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் இந்த மாபெரும் கண்காட்சி, வரும் மே 28-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியை முன்னிட்டு, நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணேரு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்று கண்காட்சியைக் கண்டுகளிக்க ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜூன் மாதம் 6-ஆம் தேதி சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு வேலை நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் அன்றைய தினம் வழக்கம்போல் இயங்கும்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் இந்த 128-வது மலர் கண்காட்சியில், 15 லட்சத்திற்கும் அதிகமான வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டேலியா, லில்லி, ஜெர்பேரா, கார்னேஷன், பேலர்கோனியம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வகை மலர்ச்செடிகள் பார்வையாளர்களைக் கவர உள்ளன.

கண்காட்சியைக் காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கோடை விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி, நீலகிரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b