Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 17 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது. திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேச்சைகள் 3 இடங்களையும் வென்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த 13-ம் தேதி பதவியேற்றார்.
அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்தார். தொடர்ந்து நாளை நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அன்பழகனுக்கு சட்டப்பேரவை உறுப்பினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்து தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்றுக்கொள்கிறார்.
முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
இதற்கான சான்றிதழ் நான்காம் தேதி பெறப்பட்டது. 14 நாட்களுக்குள் அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதியின் கீழ் தட்டாஞ்சாவடி தொகுதியை ரங்கசாமி நாளை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.
Hindusthan Samachar / vidya.b