மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் இரட்டை கொலை - கானா பாடகர்கள் இருவரை வீடு புகுந்து வெட்டி கொன்ற மர்ம கும்பல்
காஞ்சிபுரம், 17 மே (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் கானா பாடகர்கள் இருவரை மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பரத்
கொலை


காஞ்சிபுரம், 17 மே (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் கானா பாடகர்கள் இருவரை மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பரத் (25), சீனு (24) ஆகியோர் இசைக் கச்சேரிகளில் கானா பாடல்கள் பாடி வந்துள்ளனர்.

நேற்று மாலை படப்பை அருகே நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற அவர்கள், பின்னர் நண்பரான லோகேஷின் அம்மணம்பாக்கம் இல்லத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் மூவரும் பாடல்கள் பாடியும் இசை நிகழ்ச்சியிலும் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை இருசக்கர வாகனங்களில் வந்ததாக கூறப்படும் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் லோகேஷின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

முதலில் லோகேஷை தாக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.

தொடர்ந்து வீட்டில் இருந்த பரத் மற்றும் சீனுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பரத் வீட்டின் உள்ளேயும், சீனு வீட்டு வாசலிலும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா, தொழில் போட்டி தொடர்பான பிரச்சனையா அல்லது லோகேஷை குறிவைத்து வந்தவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஆறு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து இருவரை வெட்டி கொலை செய்த சம்பவம் மணிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam