Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 17 மே (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிகாலை நேரத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்ததால், கடந்த சில நாட்களாக கடும் கோடை வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சிக்கல், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், வலிவலம், திருக்குவளை, தேவூர், காக்கழனி, குருமனாங்குடி, அணக்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. சில இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த சாரல் பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கிய காட்சியும் காணப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக கோடை கால பயிர்களான பருத்தி மற்றும் எள் சாகுபடிக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam