Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 17 மே (ஹி.ச.)
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற்ற இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 89.87% வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து மே 4, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன
இத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 18 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ந. ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, புதுச்சேரியின் முதலமைச்சராக 5-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போவதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு சுமார் ₹100 கோடி அளவுக்கு பேரம் பேசப்படுகிறது. அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடர்ந்து தள்ளிப்போவதற்கு இந்த பண பேரமே முக்கிய காரணம்.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் பதவிகள் விலைபேசப்படுகின்றன.
புதுச்சேரியின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், வருவாயைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் லாட்டரி மற்றும் கேசினோ சூதாட்டங்களை மீண்டும் கொண்டு வர தற்போதைய அரசு திட்டமிடுகிறது. இது மக்களை சூதாட்டத்திற்கு அடிமையாக்கும் முயற்சி.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது. ஆனால் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததாலும், ஒருங்கிணைந்து செயல்படாததாலும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாராயணசாமியின் இந்த குற்றச்சாட்டுகள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆளும் தரப்பு இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b