நெல்லையில் வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண் - போலீஸ் விசாரணை
திருநெல்வேலி, 17 மே (ஹி.ச.) திருநெல்வேலியின் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தியாகராஜ நகரில் வசித்து வந்தவர் முத்து மாலை (வயது 36). இவர் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக கடந்த சில மாதங்களுக
Nellai


திருநெல்வேலி, 17 மே (ஹி.ச.)

திருநெல்வேலியின் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தியாகராஜ நகரில் வசித்து வந்தவர் முத்து மாலை (வயது 36). இவர் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது. இவரது கணவர் வெளி மாவட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில், 7 வயது பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி, அவரை பார்க்க செல்வதாக முத்துமாலை தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.

மேலும், திரும்பி வர தாமதம் ஆகும் என்பதால், மகளை தெரிந்தவர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து, அவர் வீடு திரும்ப இரவாகியுள்ளது. அவ்வாறு அவர் வீடு திரும்பியபோது, இரண்டு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் இரண்டு பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும், முத்துமாலை வீட்டின் அருகே வந்தபோது, அங்கு வைத்து அவரை வழிமறித்த அந்த மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் முத்துமாலையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் மூழ்கிய முத்துமாலை, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸார், முத்துமாலையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், மாநகராட்சி காவல்துறை துணை ஆணையர் விஜயகுமாரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும், கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை அவர் மேற்கொண்டார். இதேபோல், முத்துமாலை கொலைகுறித்து வழக்கு பதிவு செய்த பெருமாள்புரம் காவல்நிலைய போலீஸார், அவரின் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை கண்டறியும் பணியில் தற்போது தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

குறிப்பாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, இதை முன்னிறுத்தி தங்களின் ஆய்வு பணிகளை முடுக்கியுள்ளனர்.

இதற்கிடையில் மகளுடன் தனியாக வசித்து வந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தியாகராஜ நகர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN