பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை
திண்டுக்கல், 17 மே (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்க்கு கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் மலையடிவாரம் முதல் மலைக்கோயில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதி
Palani


திண்டுக்கல், 17 மே (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்க்கு கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் மலையடிவாரம் முதல் மலைக்கோயில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் குடும்பத்துடன் பலர் பழனிக்கு வருகை தருகின்றனர்.

மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல இயக்கப்படும் வின்ச் மற்றும் ரோப் கார் சேவையை பயன்படுத்துவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையாக நிற்கத் தொடங்கிய நிலையில், வின்ச் மற்றும் ரோப் கார் சேவையை பயன்படுத்துவதற்கு சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாத விநாயகர் கோயில் மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பலர் படிப்பாதை வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வந்தனர்.

பக்தர்கள் நெரிசலை சமாளிக்க கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குடிநீர், மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை காலம் தொடர்வதால் அடுத்த சில நாட்களிலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN