Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மே (ஹி.ச.)
ரவி மோகன் தனது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அவரது மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்த மனுவை, இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 2025 முதல் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத் தொகையும் வழங்கவில்லை எனக் கூறி ஆர்த்தி ரவி புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததால், இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் சென்னை உயர்நீதிமன்றம்-ஐ அணுகினார்.
இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி ரவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வழங்கப்பட்டு வந்த தொகையை ரவி மோகன் நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஆர்த்தி ரவி தாக்கல் செய்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே கெனிஷா சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி குறித்து வெளியிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் என்றும், இனிமேல் அதுபோன்ற பதிவுகளை வெளியிடக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ