பள்ளி வாகனங்களுக்கு தீவிர பாதுகாப்பு சோதனை - புதிய விதிமுறைகளுக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
சென்னை, 17 மே (ஹி.ச.) தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஆய்வு மேற்கொ
Bus


சென்னை, 17 மே (ஹி.ச.)

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் நடத்தப்படும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவன வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறை, கல்வித் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள், கல்வி நிறுவனங்களுக்கே நேரடியாகச் சென்று வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றன.

இந்த ஆய்வின் போது அவசர கால வெளியேறும் வழி, ஜன்னல்கள், படிக்கட்டுகள், தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தீவிரமாகச் சரிபார்க்கப்படுகின்றன. மேலும், வாகன ஓட்டுநர்களின் கண் பார்வை திறனும் பரிசோதிக்கப்படுகிறது.

வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தகுதிச் சான்று (F.C.) வழங்கப்படமாட்டாது என்றும், கடுமையான விதிமீறல்கள் இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஜூன் முதல் வாரத்திற்குள் இந்த சோதனைகளை முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசின் புதிய நடைமுறைகள் தனியார் பள்ளிகளுக்கு கடும் நிதிச் சுமையையும் அலைச்சலையும் ஏற்படுத்துவதாக கல்வி நிறுவன நிர்வாகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் CBSE பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது மாவட்ட எல்லைகளைக் கூடத் தாண்டாத உள்ளூர் பள்ளி வாகனங்களுக்கும் GPRS கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சந்தையில் சுமார் 3 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் கருவியை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து மட்டும் 18 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கருவியை பொருத்தவில்லை என்றால் வாகனங்களுக்கு Fitness Certificate வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

இதோடு, மாநிலம் முழுவதும் உள்ள RTO அலுவலகங்களில் ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கும் தகுதிச் சான்று பெற குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகவும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பு அவசியமானது என்றாலும், அதன் பெயரில் கட்டாய நடைமுறைகளும் ஊழல்களும் அதிகரிப்பது தனியார் கல்வி நிறுவனங்களை பெரிதும் பாதிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ