Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 17 மே (ஹி.ச)
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயதான மிஷ்ரா, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தேர்வு ரத்தால் அவர் மனமுடைந்ததாகவும், மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நீட் தேர்வர் ரித்திக் மிஷ்ராவின் மரணத்தை “அமைப்பின் படுகொலை” என்று விவரித்ததுடன், இன்னும் எத்தனை சோகங்கள் நிகழ வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சதுர்வேதி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சையின் மத்தியில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைப்பு ரீதியான தோல்விகளே காரணம்.
உண்மையில், ஒரு தற்கொலை மட்டுமல்ல; இப்படி மூன்று தற்கொலைகள் நடந்துள்ளன. ராகுல் காந்தி சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். ஏனென்றால், இந்தத் தேர்வுகளுக்காக தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தத்தையும், மன வேதனையையும் முற்றிலுமாக புறக்கணித்து, இந்திய அரசு நடத்திய படுகொலைகள் இவை.
மருத்துவத் தேர்வு என்பது எளிதில் தேர்ச்சி பெறக்கூடிய ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். மாணவர்கள் அதற்காக ஓராண்டு முழுவதும் பயிற்சி பெறுகிறார்கள், தயாராகிறார்கள்.
தேர்வு எழுதிய பிறகு, விடைக்குறிப்பைப் பார்த்து நன்றாக எழுதியுள்ளோம் என்று உணர்ந்த பிறகு, ‘மன்னிக்கவும், வினாத்தாள் கசிந்ததால் உங்கள் முழு தேர்வும் ரத்து செய்யப்படுகிறது, ஏனென்றால் அமைப்பை கசிவு இல்லாமல் பாதுகாக்க முடியவில்லை’ என்று சொல்வது, இது தற்கொலை அல்ல, மாணவரின் வலியையும் வேதனையையும் புறக்கணிக்கும் முழு அமைப்பின் தோல்வியால் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பதையே காட்டுகிறது.
வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு ஊழல் கூட்டணியே காரணம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கண்களில் கனவுகளுடன் இருந்த அப்பாவி இளம் மாணவர்களின் மரணத்திற்கு யார் விலை கொடுப்பார்கள்?
வினாத்தாள் தயாரிப்பவர்கள், என்.டி.ஏ ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்த மாஃபியாவின் ஒரு பகுதியாக இருக்கும் பலர் அடங்கிய ஊழல் கூட்டணியிலிருந்து வெளிவந்த வினாத்தாள் கசிவால் மாணவர்களின் கனவுகள் நொறுங்கிப்போயின. இந்த நாட்டு மக்கள் இதை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். அவர்கள் பொறுப்பேற்க வைக்கப்படுவதை உறுதி செய்வார்கள்.
நீட் வழக்குடன் தொடர்புடைய ஒரு விரிவுரையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பொறுப்பும், கடமையும் இல்லாமல் தொடர்ந்து நிலவும் முழு ஊழல் அமைப்பை காட்டுகிறது. வினாத்தாள் தயாரித்தவர்களில் ஒருவர், இந்த வினாத்தாளை கசியவிட்ட நபர்களில் ஒருவர்.
எதற்காக? அதன் மூலம் பணம் சம்பாதிக்க. நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிர்காலங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
தொடர்ந்து நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் தொடர் தோல்விக்கு சான்று. இது முழு கல்வி அமைப்பிலும் நிலவும் ஊழலின் பிரதிபலிப்பாகும், மேலும் இதற்கு முழுமையான மாற்றம் தேவை. கல்வி அமைச்சரிடமிருந்து உச்சத்திலிருந்து பொறுப்புக்கூறல் வராத வரை, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைக் காண்போம்.
பல வினாத்தாள் கசிவு சர்ச்சைகளுக்குப் பிறகும் தடுப்பு நடவடிக்கைகள் ஏன் தோல்வியடைந்தன? பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம், ஏழு ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன.
2024-ல் அவர்களுக்கு நிறைய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. சி.பி.ஐ விசாரணை பற்றி ஏன் பேசுகிறோம்? பின்னர் வரும் தண்டனையை விட தடுப்பு நடவடிக்கையை ஏன் உறுதி செய்ய முடியாது?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b