Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 மே (ஹி.ச.)
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இனிமேல் வெளிநாடுகளில் இருந்து வெள்ளிப் பார்களை (Silver Bars) இறக்குமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள், மத்திய அரசின் பிரத்யேக உரிமம் பெற்ற பின்னரே இறக்குமதி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை
(Current Account Deficit) கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணி அதிகளவில் வெளியே செல்வதை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளி இறக்குமதிக்கும் தனிப்பட்ட அனுமதி நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், நகைத் தொழில், முதலீட்டு சந்தை மற்றும் வெள்ளி வர்த்தக துறைகளில் தாக்கம் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, உள்நாட்டு சந்தையில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், தேவையற்ற இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P