Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 17 மே (ஹி.ச.)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிந்தலவாடியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இக்கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 3ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.
மே 13ஆம் தேதி முதல் சிந்தலவாடி, மேல சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, விட்டுக்கட்டி, லாலாபேட்டை, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தூக்கு தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்கு தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் உற்சவர் சிலையை 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.
மேலும் தேருக்கு முன்பாக அருள் வந்த பக்தர்கள் பலரும் பரவசத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த தூக்கு தேரோட்ட நிகழ்ச்சியில் சிந்தலவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.
தூக்கு தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
Hindusthan Samachar / GOKILA arumugam